கிழக்கு மாகாண பாடசாலைகளை 12 மணிக்கு மூடுவதற்கு முடிவு

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு - கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை செவ்வாய்க் கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக் கிழமை வரை 12 மணியுடன் மூடி விடுமாறு - கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் S .தண்டாயுதபாணி - மாகாண கல்விப் பணிப்பாளர் இற்கு பணிப்புரை விடுத்துள்ளார் -
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் நடைபெற்ற கல்வி அபிவிருத்திக் கூட்டத்தின்போதே மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது . 
தற்போது நாட்டில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கையும் பாதிக்கப்படுகின்றது. மாணவர்கள் வகுப்பறைகளிலிருந்து கற்றலை மேற்கொள்ள முடியாத நிலைமை உள்ளது. இந்நிலையில், மாணவர்களின் நன்மை கருதி இதனை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சர் தெரிவித்தார். -

இதே வேளை - கடந்த வாரம் வட மத்திய மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது .